கலந்தாய்வு கூட்டத்தை பாதியில் முடித்த எஸ்சி, எஸ்டி எம்பிக்கள் ஆய்வுக்குழு

புதுச்சேரி, ஜன. 23: புதுச்சேரியில் ஆய்வுக்கூட்டம் நடத்திய எஸ்சி, எஸ்டி எம்பிக்கள் குழு, தலைமை செயலர் வராததால் கூட்டத்தை பாதியில் முடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் 11 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் வந்தது. சேதராப்பட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளை ஆய்வு செய்து, அங்கு வசிக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். மேலும், அங்குள்ள மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தனர்.அதனை தொடர்ந்து, புதுச்சேரி ராஜீவ்காந்தி சிக்னல் அருகேயுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை கலந்துரையாடல் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. நாடாளுமன்ற குழுவினரால் அனுப்பப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் குறித்த கேள்விகளை அடிப்படையாக கொண்டு இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற எஸ்சி, எஸ்டி குழுவின் தலைவர் டாக்டர் கிரித் சோலாங்கி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசு செயலர்கள் அன்பரசு (வளர்ச்சி ஆணையர்), பத்மா ஜெய்ஸ்வால் (பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்), ஆலிஸ்வாஸ் (நலம்), அசோக்குமார் (உள்ளாட்சி நிர்வாகம்), பிரசாந்த்குமார் பாண்டா (சுகாதாரம்), அருண் (வருவாய்), மகேஷ் (இந்து அறநிலையத்துறை) மற்றும் பிசிஆர் பிரிவு எஸ்பி பாலகிருஷ்ணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை, பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை, வேளாண் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், சர்வே மற்றும் நிலப்பதிவேடு துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழிலாளர் துறை, பிசிஆர் பிரிவு, சுற்றுலா துறை, தொழில் மற்றும் வணிகத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கிய போது, தலைமை செயலர் யார், அவர் எங்கே? என குழுவின் சேர்மன் கேள்வி எழுப்பினார். தலைமை செயலர் மற்றும் போலீஸ் ஐஜி ஆகியோர் ஏன் வரவில்லை? எனவும் கேட்டனர். இதற்கு புதுச்சேரி அரசு அதிகாரிகள் பதில் அளித்தனர். இதனை ஏற்காத எம்பிக்கள் குழுவினர், ஆவேசம் அடைந்து, கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு, கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். இதனால் அதிகாரிகள் திகைத்தனர். இதுபற்றிய தகவல்களை தலைமை செயலர் மற்றும் ஐஜிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். ஐஜி சுரேந்திர சிங் யாதவ் உடனே அங்கு வந்தார். எம்பிக்கள் குழுவை சமரசம் செய்ய அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால் அதனை குழுவினர் ஏற்கவில்லை. ஓட்டலில் இருந்து ஆசிரமம் மற்றும் ஆரோவில்லுக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Stories: