சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்ெமட் விழிப்புணர்வு பேரணியில் பைக் ஓட்டிய கலெக்டர்

திருவண்ணாமலை, ஜன.21: திருவண்ணாமலையில் நேற்று சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்து பைக் ஓட்டியபடி சென்றார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று முதல் வருகிற 27ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று திருவண்ணாமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருவண்ணாமலை- வேலூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் இருந்து பேரணி புறப்பட்டது. பேரணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்து, ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். இப்பேரணியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ெஹல்மெட் அணிந்தபடி கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகம் முன் இருந்து புறப்பட்ட இந்த பேரணி அண்ணாநுழைவு வாயில் அருகே முடிவடைந்தது.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் ராகவன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அருணாசலம் (திருவண்ணாமலை), சிவானந்தன் (ஆரணி), மோட்டார வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, சிவக்குமார், மோகன், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (தொழில் நுட்பம்) மணி, கிளை மேலாளர் துரை உள்பட இருசக்கர வாகன உரிமையாளர்கள், திருவண்ணாமலை மாவட்ட அனைத்து ஓட்டுனர் பயிற்றுனர்கள், போக்குவரத்து கழக மேற்பார்வையாளர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி பேருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Related Stories: