இலவச அரிசி கேட்டு கவர்னரை மக்கள் நேரில் சந்தித்து முறையிட வேண்டும்

காரைக்கால், ஜன. 21: இலவச அரிசியை மீண்டும் வழங்கக்கோரி கவர்னரை மக்கள் சந்தித்து முறையிட வேண்டுமென அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். காரைக்கால் புதுத்துறை கிராமத்துக்கு விவசாயிகளின் குறைகளை கேட்டறியும் பொருட்டு, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் சென்றிருந்தார். அப்போது அப்பகுதி பாசன  சங்கத் தலைவர் முகம்மது யாசின், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் குறைகளை தெரிவித்தனர். புதுத்துறை, தருமபுரம் பகுதியில் இயக்கப்பட்டு வந்த புதுச்சேரி அரசு சிற்றுந்து, ஷேர் ஆட்டோக்கள்  இயக்கப்படுவதில்லை. இதனை முறையாக இயக்க வேண்டும்.

தடையில்லா மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்யவேண்டும். தற்போது அறுவடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மாவட்டத்தில் விளையும் நெல் முழுவதையும் அரசே கொள்முதல் செய்யும் வகையில், அதற்கான நிலையங்களை  திறக்க  நடவடிக்கை எடுக்கவேண்டும். பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட, நல்ல திட்டமான மாதாந்திர இலவச அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தும் முறையை அரசு கைவிட்டு, பழைய முறைப்படி, அரிசியாக வழங்கவேண்டும். அரசு வழங்கும் பணம் குடும்ப பெண்களுக்கு முறைப்படி வருவதில்லை. இதனால் குடும்பம் நடத்துவது  கடினமாக உள்ளது. எனவே, மீண்டும் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இதற்காக நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  மாதாந்திர இலவச அரிசிதான் வழங்கவேண்டும் என்பது அரசின் உறுதியான நிலைபாடு. ஆனால், இதில் கவர்னர் தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளார். எனவே, மக்கள் ஆளுநரை  நேரில் சந்தித்து  முறையிடவேண்டும். அப்போதுதான் இலவச அரிசி கிடைக்கும் என்றார்.

Related Stories: