மோகனூர் கிராமங்களில் பிட் இந்தியா சைக்கிள் தின போட்டி

நாமக்கல், ஜன.20:மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று முன்தினம், பிட் இந்தியா சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நீண்ட தூர  சைக்கிள் போட்டிகள் பல்வேறு ஊராட்சிகளில் நடத்தப்பட்டன. ஒருவந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் துவங்கிய போட்டியை, ஊராட்சி மன்றத் தலைவர் அருணா செல்லராசாமணி துவக்கி வைத்தார். இதில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒருவந்தூர் கூட்டுறவு நீரேற்று பாசன சங்கத் தலைவர் செல்ல.ராசாமணி பரிசு வழங்கி பாராட்டினார். வட்டார வளர்ச்சி அலுவலர் குணாளன் போட்டிகளை நடத்தினார். நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் சவீதாசெல்வராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இலக்கியா,  நீரேற்று பாசன சங்க துணைத்தலைவர் சதாசிவமூர்த்தி, அதிமுக ஊராட்சி செயலாளர் நடராஜன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக பிடிஓ குணாளன் தெரிவித்தார்.

Related Stories: