உறைபனி தாக்குதல் எதிரொலி மலர் செடிகள் கருகாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை

குன்னூர், ஜன.19:  உறைபனி தாக்கத்தால் காட்டேரி பூங்காவில் உள்ள மலர் செடிகள் கருகாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. குன்னூர் பகுதியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் பல வகையான  வண்ண மலர்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து நடப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காவில் உள்ள வண்ண மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது கோடை சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் முதல் உறைபனி விழ துவங்கியது. பனிப்பொழிவு மேலும் வழுவடைந்து கடந்த இரு நாட்களாக அதிகளவு நிலவுவதால் மலர் செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பனியின் தாக்கத்தில் இருந்து அவற்றை காப்பாற்ற பூங்காவில் மலர் நாற்றுகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சுற்று வட்டார கிராமங்களில் தேயிலை செடிகள் கருகியுள்ளன.

Related Stories: