மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தை தன்னிறைவு பெற்றதாக மாற்றுவேன்

உடுமலை, ஜன. 12:  மடத்துக்குளம் ஒன்றியத்தை தன்னிறைவு பெற்றதாக மாற்றுவேன் என தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மாணவி காவியா தெரிவித்தார்.

மடத்துக்குளம் அருகே உள்ள கொழுமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது மகள் காவியா, உடுமலையில் தனியார் கல்லூரியில் எம்.காம். படித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மடத்துக்குளம் ஒன்றியத்தில் 9-வது வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்றார். நேற்று நடந்த ஒன்றிய தலைவர் தேர்தலில், தி.மு.க. வேட்பாளராக  போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுபற்றி காவியா நிருபர்களிடம் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆசியுடனும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளுடனும் வெற்றி பெற்றுள்ளேன்.

தற்போது மடத்துக்குளம் ஒன்றியத்தில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. முதல்வேலையாக அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து சரிசெய்வேன். மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பேன்.

 மடத்துக்குளம் ஒன்றியத்தை தன்னிறைவு பெற்ற ஒன்றியமாக மாற்ற பெரும் பணியாற்றுவேன்.

துணைத்தலைவர் ஈஸ்வரசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். இவ்வாறு காவியா தெரிவித்தார்.

Related Stories: