ஜவ்வாதுமலை ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க மிரட்டல் சுயேட்சை கவுன்சிலரின் கணவர் புகார்

திருவண்ணாமலை, ஜன.10: ஜவ்வாதுமலை ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் ஆதரவாக வாக்களிக்க அதிமுகவினர் மிரட்டுவதாக, சுயேட்சை கவன்சிலரின் கணவர் திருவண்ணாமலை எஸ்பியிடம் புகார் அளித்தார்.ஜவ்வாதுமலை ஒன்றியக்குழு 3வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் செல்வியின் கணவர் ராமகிருஷ்ணன், திருவண்ணாமலை எஸ்பியிடம் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: ஜவ்வாதுமலை ஒன்றியக்குழு 3வது வார்டு உறுப்பினராக எனது மனைவி செல்வி வெற்றி பெற்றுள்ளார். எனவே, எனது மனைவி செல்வி கடந்த 6ம் தேதி ஜவ்வாதுமலை பிடிஓ அலுவலகத்துக்கு பதவியேற்க சென்றார். அவருடன் நானும் சென்றிருந்தேன்.

அப்போது, அங்கு வந்த அதிமுக ஒன்றிய செயலாளர் வெள்ளையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என எனது மனைவியை மிரட்டினர். மேலும், என்னை சரமாரியாகி தாக்கி, கார் கண்ணாடியை உடைத்தனர். பின்னர், அங்கிருந்த போலீசார் எங்களை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.மேலும், தொடர்ந்து எனக்கும், எனது மனைவிக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, எங்களை மிரட்டும் அதிமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் எனது மனைவி செல்வி ஜனநாயக கடமையாற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: