வில்லியனூர், பாகூர், திருபுவனையில் சாலை மறியல்

வில்லியனூர், ஜன. 9: மத்திய  அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து நேற்று நாடு தழுவிய அளவில்  பொதுவேலைநிறுத்தம் நடந்தது. புதுச்சேரியிலும் பொதுவேலைநிறுத்தத்துடன் பந்த்  போராட்டம் நடத்தப்பட்டது. அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில்  ஈடுபட்டனர். வில்லியனூரில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.  அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள்,  விடுதலை சிறுத்தை கட்சியினர் உள்ளிட்ட போராட்ட குழுவினர் வில்லியனூர்  நான்குமாட வீதிகள் வழியாக பேரணியாக வந்து இந்தியன் வங்கி முன்பு திரண்டனர்.  அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்த மேற்கு எஸ்பி ரங்கநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனிவேல்,  சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களை  அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து  போராட்டக்காரர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்:பாகூர்  பூலோக மாரியம்மன் கோயில் எதிரே வில்லியனூர் சாலையில் இந்திய கம்யூ.,  மார்க்சிஸ்ட் கம்யூ., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அனைத்து  தொழிற்சங்கத்தினர் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இந்திய கம்யூ.,  ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம்  எழுப்பினர். அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார்,  போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். திருபுவனை:மத்திய அரசுக்கு எதிராக நடந்த  பொதுவேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு  விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை அனைத்து  கட்சியினர், தொழிற்சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். முன்னதாக பிப்டிக் தொழிற்சாலை வளாகத்தில்  மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட தொழிற்சங்கத்தினர் 50 பேரை போலீசார் கைது  செய்தனர்.வில்லியனூர், பாகூர், திருபுவனை, திருக்கனூர், பாகூர் ஆகிய 4 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 450 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: