பஸ் நிலையத்தில் நடைபாதை கடைகளால் பயணிகள் பரிதவிப்பு

தேனி, ஜன.8: தேனி புதிய பஸ் நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் பயணிகள் நடந்து செல்லமுடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. தேனி நகருக்கான புதிய பஸ் நிலையம் தேனி-பெரியகுளம் பை பாஸ் சாலையில் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் இப்புதிய பஸ் நிலையத்திற்கு வருகின்றன. மேலும், இங்கிருந்தே அனைத்து வழித்தடங்களுக்கும் பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதன்காரணமாக எப்போதும் பயணிகள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக பஸ் நிலையத்திற்குள் நகராட்சி சார்பில் வணிக கட்டிடங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இக்கடைகளில் தேனீர் கடை, உணவகங்கள், செல்போன் கடைகள், பீடாஸ்டால், பேன்சிகடை என பல்வேறு வகையான கடைகள் உள்ளன.

இதில் மதுரை, சென்னை, போடி உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லக்கூடிய பஸ்கள் நிற்கும் பகுதியில் உள்ள கடைகள் பயணிகள் நடந்து செல்லும் பகுதிவரை ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தப்படுகிறது. இதில் சில தேனீர்கடைகள், சிப்ஸ் கடைகள் நடைபாதையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் பயணிகள் நடந்து செல்லும் போது, கூட்டமாக இக்கடைகளுக்கு முன்னால் பொருள்களை வாங்குவதற்காக பொருள்களை வாங்குவோர் நின்று விடுவதால் இச்சாலையில் நடந்து செல்லும் இதர பயணிகள் நடக்க வழியில்லாமல் சிரமம் அடையும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன்கருதி, பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளின் வசதிகளை மேம்படுத்த உதவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: