சேடபட்டி,திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் இரண்டு வார்டுகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை

பேரையூர், ஜன.8: ேசடபட்டி, திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வார்டுகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அசம்பாவிதத்தை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம் எழுமலை அருகேயுள்ளது எ.கோட்டைப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த 30ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண்:1ல் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்காக வேட்பாளர்கள் காளீஸ்வரி, ஜெயலட்சுமி, ஆகியோர் போட்டியிட்டனர். அதில் ஜெயலட்சுமியின் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனால் இந்த வார்டு ஓட்டுப்பெட்டியை மட்டும் கடந்த 2ம் தேதி வாக்குகள் எண்ணிக்கையின்போது, எண்ணாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

அதன்பின்பு முறையாக ஜெயலட்சுமியின் பெயர் நீக்கத்திற்கான காரணம் அறியப்பட்டு இன்று காலை 8மணிக்கு ஆணையாளர்கள் ராமர் மற்றும் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் சேடபட்டி யூனியன் அலுவலகத்தில் இந்த வார்டு வாக்குகள் எண்ணப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நிலையூர் முதல் பிட் 15வது வார்டில் போட்டியிட்டவர் சின்னப்பொன்னு. தேர்தல் கடந்த 30ம் தேதி நடந்த நிலையில், அவர் போட்டியிடும் 15வது வார்டில் அவருக்கு வாக்கு இல்லை எனவும், அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆட்சோபம் தெரிவித்தனர். இதனால் அந்த வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அந்த வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: