மத்திய பாஜ அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம், ஜன.7: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள் தங்க நகை கடன் வட்டி மானியத்தை ரத்து செய்த மத்திய பாஜ அரசை கண்டித்து மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தனசேகர், நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட செயலாளர் நேரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வாசுதேவன், விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் சசிகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

அதில், கடனுக்கான வட்டியை 9.5 சதவீதமாக உயர்த்தியதை கைவிட வேண்டும். முன்புபோல, 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். விதை, உரம், பூச்சி மருந்து ஆகிய பொருட்களின் விலையை உயர்த்த கூடாது. கிராம புறங்களில் நடக்கும் 100 நாள் வேலையை 200 நாள் வேலையாக வழங்கவேண்டும். அதற்கான கூலியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாதர் சங்க வட்ட செயலாளர் இந்திரா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி தினேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: