திசையன்விளையில் துணிகரம் 2 கோயில்கள், தர்ஹாவில் உண்டியல் உடைத்து திருட்டு

திசையன்விளை, ஜன. 7: திசையன்விளையில் ஒரே நாள் இரவில் 2 கோயில்கள், தர்ஹாவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். திசையன்விளை தெற்கு தெருவில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். இதேபோல் அருகில் மேலபள்ளிவாசல் தெருவில் உள்ள தர்ஹா முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் மர்மநபர்கள் உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். இதேபோல் செக்கடி தெருவில் உள்ள முருகன் கோயிலிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ஆனால் அங்கு உண்டியலில் பணம் எதுவும் இல்லை. 3 சம்பவங்களிலும் ஒரேகும்பல் தான் ஈடுபட்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது.

இதுகுறித்து தேமுதிக நகர செயலாளர் நடேஷ்அரவிந்த் திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். எஸ்ஐ முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் நிர்வாகி சேர்மராஜன், முருகன் கோயில் நிர்வாகி சுந்தரம், பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் இன்ஷார் ஆகியோர் திசையன்விளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஒரே நாள் இரவில் 2 கோயில் உள்பட 3 இடங்களில் கொள்ளை சம்பவம் நடத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: