விஐபி தரிசன முறையில் மாற்றம் பழநி கோயில் நிர்வாகம் முடிவு

பழநி, ஜன. 3: பழநி கோயிலில் விஐபி தரிசன முறையில் மாற்றம் செய்ய கோயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் சாதாரண நாட்களில் 6 கால பூஜை நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இடைவிடாது சாமி தரிசனம் செய்யலாம். இதுநாள்வரை பழநி கோயிலுக்கு வரும் விஐபிக்கள் கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ள தெற்குப்பகுதி வழியாக உள்நுழைந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.

அனைத்து நேரங்களிலும் சிறப்பு அனுமதி சீட்டு பெற்று முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். பல்வேறு நபர்களும் பணம் கொடுத்து முக்கிய பிரமுகர்கள் எனக்கூறிக் கொண்டு சில நிமிடங்களில் சாமி தரிசனம் செய்து வந்தனர். இதனால் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்படுவதாக புகார் எழுந்தது. நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று அதிக கூட்டத்தின் காரணமாக பக்தர்கள் வெளியே வரும் வழியில் விஐபி லைனில் ஏராளமான பக்தர்கள் புகுந்து விட்டனர். இதனால் சாமி தரிசனம் செய்து முடித்த பக்தர்களும், வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

வரிசையில் நின்ற பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாக விஐபி தரிசன முறையில் மாற்றம் கொண்டு வர கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி நாளொன்றிற்கு 3 முறை மட்டுமே விஐபி தரிசனத்திற்கு இனி வழங்கப்படும். காலை 10 மணி முதல் 11 மணி வரையும், பகல் 2 மணி முதல் 4 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாளொன்றிற்கு 300 பேருக்கு மட்டுமே முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் வழங்கப்படும். முக்கிய பிரமுகர்களுக்கு கைகளில் பார்கோடு பொறிக்கப்பட்ட பிரத்யேக டேக் வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Related Stories: