அரசு பட்டா வழங்கிய இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு

மேல்மலையனூர், டிச. 30: மேல்மலையனூர் அருகே அரசு பட்டா வழங்கிய இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை இடித்து சூறையாடிய 13 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கடந்த 1998ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழாவின் போது மேல்மலையனூர் அடுத்த தாமனூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகன் சூசை மற்றும் லூர்துசாமி மகன் ராயப்பன் ஆகியோருக்கு சொந்தமான 2 ஏக்கர் 60 சென்ட் இடத்தை அரசாங்கம் கையகப்படுத்தி ஆதிதிராவிட நலத்துறை சார்பில் அதே கிராமத்தை சேர்ந்த 37 பயனாளிகளுக்கு தலா 3 சென்ட் வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளனர். இந்த இடம் தொடர்பாக கடந்த 22 ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால் இருதரப்பினரும் நீதிமன்றம் சென்றதால் இதுவரை சரியான தீர்வு காணப்படாமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேற்படி பயனாளி பட்டியலில் உள்ள மாரியம்மாள், பெரியநாயகி, கலாராணி, அன்னபூரணி ஆகியோர் அரசு வழங்கிய வீட்டுமனையில் ஹாலோ பிளாக் கல்லை வைத்து வீடு கட்டி உள்ளனர். செலின் மேரி என்பவர் தென்னங்கீற்றால் சிறியதாக கூரை அமைத்துள்ளார்.இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் ராயப்பன் மகன்கள் அமலதாஸ் (33), ஜோசப் (31), ஜான் பாப்திஸ் (29) மற்றும் அவர்களது நண்பர்கள் என மொத்தம் 13 பேர் தாமனூருக்கு வந்து, அந்த வீடுகளை இடித்து சேதப்படுத்தி, கூரை கொட்டகையை தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், வளத்தி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீடுகளை சேதப்படுத்திய 13 பேரையும் அதிரடியாக பிடித்து கைது செய்தனர். அரசு, தனி நபரிடமிருந்து இடத்தை வாங்கி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியுள்ள நிலையில் பயனாளிகளை பயன்படுத்தவிடாமல் நீண்ட நாட்களாக இதுதொடர்பான பிரச்னை நீடித்து வருகிறது. இவ்விவகாரத்தில் அரசு அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் தொடர்ந்து இதே நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: