ஊட்டி குதிரை பந்தய மைதான பார்க்கிங்கில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பொதுமக்கள் கடும் அவதி

ஊட்டி, டிச. 29:  ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங்கில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அதிக வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 மாவட்ட நிர்வாகம் குதிரை பந்தய மைதானத்தில் (ஏடிசி., அருகே) சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்துள்ளது. இந்த பார்க்கிங்கில் கான்கிரீட் தளம், இன்டர்லாக் கற்கள் போன்றவை அமைக்கப்படாமல், வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. சதுப்பு நிலம் என்பதால், இந்த பார்க்கிங் தளம் முழுவதும் மேடு பள்ளங்களாக மாறியுள்ளது.

 தற்போது இங்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், மழைக்காலங்களில் ேசறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதுமட்டுமின்றி, இங்கு வாகனங்கள் நிறுத்த எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில் நுழைவு வாயில் முன் பகுதியிலேயே வாகனங்கள் அனைத்தும் தாறுமாறாக நிறுத்தி விடுகின்றனர். இதனால், சில சமயங்களில் சற்று தொலைவில் நிறுத்தப்படும் வாகனங்கள் வெளியில் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் யாரும் பணியில் அமர்த்தப்படாத நிலையில், பொருட்கள் களவாட வாய்ப்புள்ளது.

எனவே, ஏடிசி., குதிரை பந்தய மைதான பார்க்கிங் தளத்தை சீரமைத்து வாகனங்கள் முறையாக நிறுத்தவும், வாகனங்கள் உள்ளே செல்ல மற்றும் வெளியில் எளிதாக வர ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: