பனியன் நிறுவன செக்யூரிட்டி கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது

திருப்பூர், டிச.27:திருப்பூரில் பனியன் நிறுவன செக்யூரிட்டி அடித்து கொலை செய்த விவகாரத்தில் மேலும் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். நிலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பேலன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (35). இவர் கோவையிலுள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தின் மூலம் திருப்பூர் திருமுருகன் பூண்டியை அடுத்த அணைப்புதூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தங்கி செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு ஊழியரான உதயசந்திரனுடன் சேர்ந்து அந்த பின்னலாடை நிறுவனத்திலுள்ள பனியன் துணிகள் மற்றும் ரோல்கள் ஆகியவற்றை திருடியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் சேர்ந்து முருகேசன் மற்றும் உதயசந்திரனை கம்பெனியின் மாடியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் உதயசந்திரன் அங்கிருந்து தப்பினார். முருகேசனை சரமாரியாக தாக்கிவிட்டு நிறுவனத்தின் மாடியிலே விட்டு சென்றுள்ளனர். பின்னர் கோவையிலுள்ள தனியார் செக்யூரிட்டி நிர்வாகத்தினர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காயமடைந்த மற்றொருவரான உதயசந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருமுருகன் பூண்டி போலீசார் அதே நிறுவனத்தில் பணியாற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணக்குமார் (27), திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த சுதன் (43) ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதே நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில் குமார்(33), சுதேசன்(29), அருண்(31), புருசோத்தமன், யுவராஜ், ரஜனி ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.

Related Stories: