ஊட்டி, டிச. 25: ஊட்டி-கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க ரோலர் கிராஸ் பேரியர் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் ஊட்டி அருகேயுள்ள மசினகுடி, முதுமலை புலிகள் காப்பத்திற்கு செல்கின்றனர். இவர்கள் தலைகுந்தா, கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்கின்றனர். அதேபோல், கர்நாடகம் மாநிலம் மைசூர் செல்ல இவ்வழித்தடம் குறுக்கு பாதை என்பதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இச்சாலையையே பயன்படுத்தி வந்தனர். இதன் மூலம் அவர்களுக்கு நேரம் மட்டுமின்றி, தொலைவும் மிச்சமாகி வந்தது. ஆனால், செங்குத்தான மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இச்சாலையில் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்க தெரிவதில்லை. இதனால், இவர்கள் இச்சாலையில் சென்று அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இதில் குறிப்பாக, கேரள மாநில வாகனங்கள், வேன்கள் அதிகளவு விபத்தில் சிக்கி வந்தன. இதனால், இவ்வழித்தடத்தில் முதலில் வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. பின், கேரள மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் இருந்தது. இறுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்து மூன்று நாட்களுக்கு பின்னரே தகவல் தெரிய வந்தது. மேலும், மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்த 5 பேருடன், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தையடுத்து இச்சாலையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல அன்று முதல் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இச்சாலையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வெளியூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.