நவீன மயமாக்கப்படும் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 500 ஆண்டுகள் பழமையான வீரபத்திர சுவாமி ேகாயிலை அகற்றக்கூடாது
வேலூர், டிச.24: வேலூர் புதிய பஸ் நிலையத்தை நவீன மயமாக்கும் கட்டுமான பணிகளுக்காக 500 ஆண்டுகள் பழமையான வீரபத்திரசுவாமி ேகாயிலை அகற்றக்கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் இந்து முன்னணியினர் மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில், இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கரன், மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் மற்றும் இந்து முன்னணியினர் அளித்த மனுவில், ‘வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 500 ஆண்டு பழமையான அகோர வீரபத்திர சுவாமி கோயில் உள்ளது. இது சலவை தொழிலாளர்களுக்கு சொந்தமான கோயில். 1945ம் ஆண்டிலேயே வேலூர் முன்சீப் கோர்ட்டில் நடந்த வழக்கில் இதுதொடர்பாக தீர்ப்பாகியுள்ளது. இந்நிலையில், நவீன பஸ் நிலைய கட்டுமான பணிக்காக கோயிலை அங்கிருந்து அகற்ற உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே கோயில் அகற்றப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.
வேலூர் கீழ்மொணவூரை சேர்ந்த யாகவகுமரன் மகள் கலைச்செல்வி அளித்த மனுவில், ‘நான் அரசுப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறேன். எனது வீடு உள்ள தெருவில் 500 வீடுகளின் கழிவுநீர் தேங்குகிறது. கழிவுநீரில் இறங்கிதான் நாங்கள் பள்ளிக்கு செல்கிறோம். கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி குறைதீர்வு கூட்டத்தில் 5 முறை மனு அளித்துள்ளோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவுநீர் தேங்குவது குறித்து மனு அளித்த எங்களை ஊராட்சி செயலாளர் மிரட்டுகிறார்’ என்றார்.
வேலூர் ரங்காபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி-5ல் வசிக்கும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எங்கள் பகுதிக்கு செல்ல 20 ஆண்டு காலமாக கோதண்ட ராமசுவாமி கோயிலுக்கு சொந்தமான நெடுஞ்சாலையை ஒட்டிய காலிமனையை பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த பாதையை கோயில் நிர்வாகம் வேலி அமைத்து மூடிவிட்டது. எனவே, முள்கம்பியை அகற்றி மீண்டும் பாதையை ஏற்படுத்தி தர வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். இதேபோல் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
