இரண்டரை ஆண்டாக தட்டுப்பாடு குடிநீர் விநியோகம் கேட்டு பிடிஓவிடம் மக்கள் புகார்

பள்ளிபாளையம், டிச.19:  பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில், கடந்த  இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி 10வது வார்டு லட்சுமி நகர் பகுதியில், சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவில்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே வழங்குவதால், லட்சுமி நகர் பகுதி மக்கள் தண்ணீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

காவிரி குடிநீரும், தினமும் 2 குடம் மட்டுமே கிடைப்பதால், தண்ணீர் தேடி அருகில் உள்ள பகுதிக்கு மக்கள் அலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று லட்சுமி நகர் பகுதி பொதுமக்கள், திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் முத்துப்பாண்டி, சரவணன் ஆகியோர் தலைமையில் திரண்டு சென்று, பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து புகார் செய்தனர். அப்போது, இரண்டரை ஆண்டுகளாக தண்ணீரின்றி சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதை கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், இதுகுறித்து தனது கவனத்திற்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை எனவும், சம்பந்தப்பட்ட தொட்டியை ஆய்வு செய்து, 2 நாளில் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள் திரும்பிச்சென்றனர்.

Related Stories: