உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர்,டிச.13:திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலத்திற்குட்பட்ட அணைப்பாளையத்தில் முக்கால் ஏக்கரில் மயானம் உள்ளது. இதில் உர உற்பத்தி மையம் தொடங்குவதற்காக 20 சென்ட் நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் கேட்டது. மயானம் என்பதால் அப்பகுதி பொதுமக்களும் அனுமதித்தனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் எஞ்சிய மயான நிலத்திலும் வாகனங்கள் செல்ல ஏதுவாக பாதை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அதிகாரிகளை நேற்று முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 4-வது மண்டல உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மயானத்தில் குப்பை கிடங்கு அமைக்க அனுமதி தந்தோம். மாநகராட்சி நிர்வாகம் கட்டிடமும் கட்டிவிட்டது. இந்நிலையில் நாங்கள் பயன்படுத்தி வரும் மயானத்தையும் முழுமையாக மாநகராட்சி கையகப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். பாதைக்காக மயானம் ஆக்கிரமிக்கப்பட்டால் நாங்கள் எங்கு செல்வது? என்று தெரியவில்லை. இது எங்களின் அத்தியாவசியமாக இருப்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மாநகராட்சி ஆக்கிரமிப்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. பொதுமக்கள் கடந்த பல  ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் நிலத்தையும் கொடுத்துவிட்டு நாங்கள் எங்கு செல்வது? என்றனர்.

Related Stories: