கோவையில் நாளை மறுதினம் இரும்பு வியாபாரிகள் சங்க பவள விழா

கோவை, டிச. 13:  கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்க பவள விழா நாளை மறுதினம் நடக்கிறது. இதில், தெலுங்கானா கவர்னர் மற்றும் தமிழக துணை முதல்வர் பங்கேற்கின்றனர். கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்க தலைவர் பாபா பாலசுப்பிரமணியன் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கம் கடந்த 1944ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இச்சங்கம் சார்பில் ஆண்டுக்கு 2 லட்சம் டன் இரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, கட்டுமான துறைக்கு விற்பனை செய்யப்படுகிறது.  இச்சங்கத்தின் பவள விழா நாளை மறுதினம் (15ம் தேதி ஞாயிறு) கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் நிகழ்வில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட பலர் பேசுகின்றனர். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் நிகழ்வில், மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. பெரியய்யா, நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன், கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் லட்சுமிநாராயணசாமி, பெடரேசன் ஆப் டிரேடு அசோசியேசன் துணை தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் சுனில் கே.டெக்சன்டனி, பா.ஜ. அகில இந்திய இளைஞர் அணி துணை தலைவர் முருகானந்தம், கோவை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி, தமிழக செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சின்னராஜ், ஸ்ரீநாகசாய் டிரஸ்ட் செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் பேசுகின்றனர். இதையொட்டி, கோவை அசோக் குழுவினரின் கலக்கல் காமெடி நிகழ்ச்சி, இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியவையும் நடக்கிறது.   இவ்வாறு பாபா பாலசுப்பிரமணியம் கூறினார். பேட்டியின்போது, துணை தலைவர் நடராஜன், நிர்வாக செயலர் முருகானந்தம், பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பழனியப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: