57 ஆக்கிரமிப்பு குடிசைகளை அதிகாரிகள் அதிரடி அகற்றம்

புதுச்சேரி, டிச. 13: புதுச்சேரி, மூலகுளம் குண்டு சாலை பகுதியில் 57 ஆக்கிரமிப்பு குடிசைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இதற்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி, உழவர்கரை தொகுதிக்குட்பட்ட மூலகுளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் குண்டு சாலையில் சாலையோரம் 57 குடிசை வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கு ஏற்கனவே லம்போர்ட் சரவணன் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் அரசு இடம் ஒதுக்கிய நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியை காலி செய்யுமாறு பலமுறை அறிவிப்பு செய்தனர். மேலும் சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒன்றரை மாதத்துக்கு முன்பு எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அருணின் வேண்டுகோளை ஏற்று பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீட்டை காலி செய்து மாற்று இடத்துக்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில் மீதமுள்ள வீடுகளையும் காலி செய்ய தேசிய நெடுஞ்சாலை, நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் டிசம்பர் 11ம்தேதி வரை காலக்கெடு விதித்திருந்தனர்.

Advertising
Advertising

அதன்படி நேற்று தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் ஏழுமலை தலைமையில் தாசில்தார் குமரன் மற்றும் நகராட்சி, மின்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் 2 பொக்லைன் இயந்திரத்துடன் அப்பகுதிக்கு வந்து ஆக்கிரமிப்பு குடிசைகளை அதிரடியாக இடித்து அகற்றினர். இதற்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.  மேலும் சிலர் இன்று மின்தடை என்பதால் மின்சாதன பொருட்களை அகற்றுவதில் சிரமம் இருப்பதாகவும், கால அவகாசம் வேண்டுமென முறையிட்டனர். அதை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் சிலருக்கு 2 நாள் மட்டும் அவகாசம் அளித்துவிட்டு மற்ற குடிசைகளை வரிசையாக இடித்தனர். அப்போது மகாலட்சுமி என்பவர் குழந்தையுடன் வாசலில் அமர்ந்து தனது வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

அதை நிராகரிக்க அதிகாரிகள் மகளிர் போலீசாரின் உதவியுடன் அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வீட்டை இடித்து தள்ளினர். இதேபோல் அடுத்தடுத்த வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையொட்டி வடக்கு எஸ்பி சுபம் கோஷ் தலைமையில் ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், எஸ்ஐ வீரபத்திரன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: