சேரன்மகாதேவி அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு

பேட்டை, டிச. 12: சேரன்மகாதேவி அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். முக்கூடலை அடுத்த வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் செண்பகம் மகன் அருண்குமார்(32), தனியார் பஸ் டிரைவரான இவர், கடந்த 6ம் தேதி வி.கே.புரத்தில் இருந்து நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு பஸ்சை ஓட்டி வந்தார். சேரன்மகாதேவி அடுத்த சங்கன்திரடு விலக்கு அருகே வரும்போது சாலையோரம் நின்ற மாடு திடீரென குறுக்கே பாய்ந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து காயமடைந்த 18 பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் நெல்லை டவுன் பெருமாள் ரதவீதியைச் சேர்ந்த கோமதி(63), கல்லிடைக்குறிச்சி ஜெயந்தி(42), பிச்சம்மாள்(60) உள்ளிட்ட 6 பேர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கணேசன் மனைவி லதா(53) என்பவர் உயிரிழந்தார்.இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காருகுறிச்சியைச் சேர்ந்த மகாதேவன்(63) என்பவர் நேற்று அதிகாலை இறந்தார். இவர், வடக்கு அரியநாயகிபுரம் உதயதாண்டவ சாஸ்தா கோயிலில் அர்ச்சராக இருந்தார். இதையடுத்து பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>