காவலன் செயலியை பயன்படுத்தினால் 100 சதவீதம் பாதுகாப்பு உறுதியாகும்

தஞ்சை, டிச. 12: காவலன் செயலியை பயன்படுத்தினால் 100 சதவீதம் பாதுகாப்பு உறுதி என்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன் பேசினார். தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் காவலன் செயலி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எஸ்பி மகேஸ்வரன், கல்லூரி முதல்வர் திருவள்ளுவன், தஞ்சை நகர துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். காவலன் செயலி தொடர்பான துண்டு பிரசுரங்களை மாணவிகளிடம் வழங்கி தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன் தலைமை பேசியதாவது: காவலன் செயலியை பயன்படுத்தினால் உங்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி. இந்த செயலியை ஆன்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும். பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், சிறுவர்களுக்கு இது பாதுகாப்பானதாக இருக்கும்.

இந்த செயலியில் உங்களின் உறவினர்கள் 2 பேரின் செல்போன் எண்களை கட்டாயம் பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும். ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இந்த செயலி மூலம் நீங்கள் தொடர்பு கொண்டால் அது சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும். அங்கிருந்து உங்கள் செல்போன் இருக்கும் இடம் குறித்த தகவல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள 2 எண்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும். இந்த செயலியை பயன்படுத்தினால் பெண்களின் பாதுகாப்பு உறுதி. தற்போது வாட்ஸ் அப், முகநூல் போன்றவை மூலம் பல்வேறு ஆபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

எனவே அதை தேவை என்றால் மட்டும் பயன்படுத்துங்கள். தவறான வழியில் பயன்படுத்தினால் அது உங்களையே பாதிக்கும். விளையாட்டாக செய்தால் அது வினையாக முடியும். எனவே ஜாக்கிரதையாக அணுகுங்கள். உங்கள் வெற்றி உங்கள் கையில் தான் உள்ளது. கடின உழைப்பு, விடா முயற்சி இருந்தால் நினைத்த காரியம் வெற்றியடையும். இந்த செயலி குறித்து மற்றவர்களுக்கும் எடுத்து கூறுங்கள் என்றார்.

Related Stories:

>