சாலை விதிமுறை மீறுவோருக்கு இ-சலான் முறையில் அபராதம் செலுத்தும் வசதி

திருப்பூர், டிச. 12:    தொழில் நகரமான திருப்பூரில் தொழில் வளர்ச்சிக்கேற்ப நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதேபோல் மக்கள் தொகை பெருக்கத்தால் குற்றங்களும் பெருகி உள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் நகரில் போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துக்களும் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் அதையும் தாண்டி திருப்பூர் மாநகர காவல்துறை சாலை விபத்துக்கள் மற்றும் குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுள்ளனர். சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இதுவரை வாகன ஓட்டிகள் அபராத தொகையை பணமாக செலுத்தி வந்த நிலையில் தற்போது இ-சலான் என்ற முறையில் அபராத தொகையை செலுத்தும் நடைமுறை திருப்பூர் மாநகரில் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100, ஓட்டுனர் உரிமம் மற்றும் காப்பீடு இல்லையென்றால் ரூ.500, கார் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: