பணியிட மாற்றம் செய்து 3 மாதமாகியும் பொறுப்பேற்காமல் பழைய இடத்தில் அடம்பிடிக்கும் ஊராட்சி செயலர்

கூடுவாஞ்சேரி, டிச.12: பணியிட மாற்றம் செய்து 3 மாதமாகியும், பழைய இடத்திலேயே வேலை வேண்டும் என ஊராட்சி செயலர் அடம்பிடிக்கிறார். பதிவேடுகளை புதிய செயலரிடம் ஒப்படைக்காததால், மக்கள் பணி பாதிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சி செயலர் ஏழுமலை காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கும், காரணைப்புதுச்சேரி ஊராட்சி செயலர் ஜெயச்சந்திரன் பாலூருக்கும், பாலூர் ஊராட்சி செயலர் சிவபிரகாசை நெடுங்குன்றம் ஊராட்சிக்கும், கடந்த செப்டம்பர் 9ம் தேதி பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவை காட்டாங்கொளத்தூர் பிடிஓ அவர்களிடம் வழங்கினார். ஆனால், பாலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் ஜெயச்சந்திரன், பாலூரில் பொறுப்பேற்கவில்லை. இதனால், பாலூர் ஊராட்சியில் கடந்த 4 மாதமாக மக்கள் பணிகள் யாக பாதிக்கப்பட்டுள்ளன. காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் கடந்த மாதம் 20ம் தேதி பொறுப்பேற்று கொண்ட ஊராட்சி செயலர் ஏழுமலை, 3 வாரமாக அலுவலகத்துக்கு சென்று வருகிறார். ஆனால், அவரிடம் வீட்டு வரி புத்தகம், காசோலை புத்தகம், பணபரிவர்த்தனை புத்தகம் உள்பட பல்வேறு பதிவேடுகளை பழைய ஊராட்சி செயலர் ஜெயச்சந்திரன் இதுவரை ஒப்படைக்கவில்லை.

மேலும், 16 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட காரணைப்புச்சேரி ஊராட்சியில், மழை நிவாரண பணிகள், கால்வாய் தூர்வாரும் பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதேபோல், ஊராட்சியில் பணியாற்றும் பம்ப் ஆபரேட்டர்கள், தெருவிளக்கு பராமரிப்போர், தூய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை செய்பவர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்களும் வேலை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் மற்றும் பல்வேறு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, மாவட்ட நிர்வாகம், காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், தேங்கியுள்ள மக்கள் பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: