பழநியில் விற்கப்படும் குறைந்த விலை மெத்தையால் பக்க விளைவுகள் டாக்டர்கள் எச்சரிக்கை

பழநி, டிச. 11: பழநியில் குறைந்த விலையில் வடமாநிலத்தவர்களால் விற்பனை செய்யப்படும் மெத்தைகளை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுமென டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். தற்போது பழநி நகரில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என மே மாதம் வரை பக்தர்கள் வருகை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக பொம்மை, பேன்சி பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் என பல்வேறு வகை வியாபாரங்கள் அடிவார பகுதிகளில் நடக்கின்றன.

தவிர ராஜஸ்தான், குஜராத் போன்ற வெளிமாநில வியாபாரிகளும் மத்தளம் போன்ற பொருட்களை விற்பனை செய்கின்றனர். மேலும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மெத்தை விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் திருப்பூரில் இருந்து தரம் குறைவான துணிக்கழிவுகள் மற்றும் பஞ்சுகளை வாங்கி வந்து மெத்தைகளை தயாரிக்கின்றனர். இந்த மெத்தைகள் ரூ.800ல் துவங்கி ரூ. 1000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. விலை குறைவு என்பதால் பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். உரிய அளவுகளை பின்பற்றாமல் பஞ்சு மற்றும் துணிகள் திணிக்கப்படுவதால் மெத்தை சமமான பரப்பில் இருப்பதில்லை. இதில் படுக்கும்போது முதுகு வலி, இடுப்பு வலி, உடல் உஷ்ணம் போன்றவை ஏற்படுமென்றும், ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் உள்ள மெத்தைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டுமென்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: