ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 10.50 கோடியில் தயாராகி வரும் சமுதாய கூடம்

சேலம், டிச.11: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சேலம் தொங்கும் பூங்காவில் கட்டப்பட்டு வரும் 10.50 கோடி மதிப்பிலான சமுதாய கூடம், வரும் மார்ச் மாதம் திறக்கப்படுகிறது. சேலம் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, தொங்கும் பூங்கா வளாகத்தில் 10.50 கோடி மதிப்பில், பல்நோக்கு சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி கமிஷனர் சதீஷ், நேற்று அப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணி விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கமிஷனர் சதீஷ் கூறுகையில், ‘‘சேலம் மாநகர மக்களுக்காக பிரம்மாண்டமான முறையில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது.

இதில் 1,000 பேர் அமரக்கூடிய வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட விழா நிகழ்வு அரங்கம், 450 பேர் ஒரே நேரத்தில் உணவருந்த தனி அரங்கம், நவீன சமையல் அறை கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், 2, 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, மார்ச் மாதத்தில் தமிழக முதல்வர் இதனை திறந்து வைக்க உள்ளார்,’’  என்றார். ஆய்வின் போது, மாநகர பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் திலகா, முத்து, உதவி பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: