ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாவட்டத்தில் 20 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பு

சேலம், டிச.11:சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு, 20 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகிறது.

தமிழகத்தில் 3 ஆண்டுகள் தாமதமாக, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4,299 பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த இரு தினங்களாக பெறப்பட்டு வருகின்றன.

ஊரக உள்ளாட்சிக்கான வாக்குப்பதிவு அனைத்தும் வாக்குச்சீட்டு அடிப்படையிலேயே நடக்கிறது. இதற்கான, வாக்குப்பெட்டிகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் வாக்குகளை எண்ண 20 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் உள்ள, தனியார் கல்லூரி வளாகங்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அங்கு, தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், வாக்கு எண்ணிக்கைக்கான இடம் மற்றும் கட்டிட வசதி, மின்சாதன பொருட்கள், போக்குவரத்து வசதி, அடிப்படை சுகாதார வசதிகள் உள்ளனவா என சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 20 இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, வாக்கு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முதற்கட்ட பணிகள், ஓரிருநாளில்  தொடங்கும் என

தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: