பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிய அரசு அதிகாரியை வழிமறித்து தாக்கிய கும்பல் அடையாளம் தெரிந்தது

புதுச்சேரி:  புதுவையில் பணியை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய பொதுப்பணித்துறை அதிகாரியை வழிமறித்து தாக்கிய கும்பல் அடையாளம் தெரிந்த நிலையில் அவர்களை உருளையன்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுவை, லாஸ்பேட்டை, செல்லபெருமாள் பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (53). பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு இளநிலை பொறியாளரான இவர் நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் லெனின் வீதி சந்திப்பு சத்யா நகர் வழியாக வந்தபோது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை திடீரென வழிமறித்து இரும்பு தடியால் சரமாரி தாக்கியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்ட நிலையில் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. படுகாயமடைந்த அதிகாரியை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இதுதொடர்பாக உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertising
Advertising

இதில் பொதுப்பணித்துறை அதிகாரியை தாக்கிய கும்பல் அடையாளம் தெரிந்தது. அதன்பேரில் செயின்ட்பால் பேட் பகுதியைச் சேர்ந்த நிவாஸ் உள்பட 4 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நிவாஸ் வீட்டிற்கு போலீசார் நேற்று சென்ற நிலையில் அவர் வீட்டிலிருந்து மாயமாகி இருப்பது தெரிய வரவே, அவரது உறவினர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அரசு அதிகாரியை அவர்கள் தாக்கினார்களா அல்லது வேறு காரணமா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடக்கிறது.

Related Stories: