சிதம்பரம் நகரில் புதிதாக போடப்பட்ட சாலை பழுதாகும் அவலம்

சிதம்பரம்:  சிதம்பரம் நகரில் கடந்த 2016ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய இந்த பணிகள் பல்வேறு காரணங்களால் 4 ஆண்டுகள் ஆக உள்ள நிலையிலும் இன்னும் முழுமை பெறவில்லை. பாதாள சாக்கடை பணிகள் முழுவதும் முடிவடையாததால் சிதம்பரம் நகரில் பல்வேறு சாலைகள் போடப்படாமலேயே உள்ளது. பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மரண குழிகளாக மாறி விட்டது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்களின் தொடர் போராட்டங்களால் சமீபத்தில் நகரின் முக்கிய சாலைகள் புதிதாக போடப்பட்டது. பொதுமக்களின் அதிக பயன்பாட்டுக்கு உண்டான சாலைகள் மட்டும் முதல் கட்டமாக புதியதாக போடப்பட்டது. மற்ற சாலைகள் இன்று வரை பல்லாங்குழி சாலைகளாகவே உள்ளது. இந்த நிலையில், புதிதாக போடப்பட்ட சாலைகளில் ஒரு சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சிதம்பரம் நகரில் உள்ள முக்கிய சாலையான எஸ்பி கோயில் தெரு சாலையில் சின்ன மார்க்கெட் அருகே ஒரு இடத்தில் திடீரென பள்ளம் உருவானது.

சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் பிரதான இந்த முக்கிய சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு சாலை உள் வாங்கியதை அடுத்து உடனடியாக இந்த இடத்தில் ஜல்லி கொட்டப்பட்டு அவசர, அவசரமாக சீரமைக்கப்பட்டது. இதே நிலைதான் பெரும்பாலான சாலைகளில் உள்ளது. புதிதாக போடப்பட்ட சாலைகள் திடீர் திடீரென சேதமடைவதால் எப்போது எங்கே பள்ளம் உருவாகுமோ என்ற பயத்தில் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்கின்றனர். புதிதாக போடப்பட்ட சாலைகள் உடனுக்குடன் பழுதடைவதால் பொதுமக்களுக்கு சாலையின் தரத்தைப் பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அதனால் சாலையின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: