மருத்துவக் கல்லூரி அமைய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

நாகை, டிச.10: நாகையில் மருத்துவக்கல்லூரி அமைய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என்று இந்திய வர்த்தக தொழில் குழுமம் தெரிவித்துள்ளது. இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நாகையில் நடந்தது. செயலாளர் சுந்தரவேலு வரவேற்றார். தலைவர் ரவி தலைமை வகித்தார். பொருளாளர் நிஜாம், துணை தலைவர் பாட்சா, இணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பின் தலைவர் ரவி கூறியதாவது: நாகையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 500 படுக்கைக்கு மேலாக தங்கி சிகிச்சை செய்யப்படும் மருத்துவமனையாகவே உள்ளது. தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையாகவும் இருந்து வருகிறது. ஆனால் இங்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சைக்கான உபகரணங்கள், பலதரப்பட்ட நோய்க்கான சிகிச்சை செய்ய சிறப்பு மருத்துவர்கள் இல்லை.

கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்குதலின் போது உரிய சிகிச்சை உடனே வழங்க முடியாத காரணத்தால் பலர் உயிர்விட நேர்ந்தது. இயற்கை பேரிடர் நிறைந்த பகுதியாக நாகை உள்ளது.

இலங்கை கடற்படையினரால் அடிக்கடி மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இவ்வாறு தாக்கப்படும் மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதி நாகையில் இல்லை. பிற மாவட்டங்களில் எல்லாம் மருத்துவக்கல்லூரி மாவட்ட தலைநகரங்களில் தான் அமைந்துள்ளது.அதேபோல் நாகையில் தான் மருத்துவக்கல்லூரி அமைய வேண்டும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நாகையில் மருத்துவக்கல்லூரி அமைய ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் எங்கும் நடைபெறாத ஒரு முறையற்ற செயல் நாகை மாவட்டத்தில் நடக்கிறது. நாகையில் மருத்துவக்கல்லூரி அமைய கூடாது அதை மயிலாடுதுறை நீடுரில் அமைத்து தர வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கை சந்திக்க இந்திய வர்த்தக தொழில் குழுமம் தயாராக உள்ளது. நாகையில் மருத்துவக்கல்லூரி அமையவிடாமல் தடுக்கும் வகையில் மயிலாடுதுறையில் கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. நாகையில் மருத்துவக்கல்லூரி அமைய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என்றார்.

Related Stories:

>