மாவட்டத்தில் முதல்கட்டமாக 95 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல்

ஈரோடு, டிச.10: ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக 95 சிற்றூராட்சிகளுக்கு வரும் 27ம்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, 30ம் தேதி 130 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 27 மற்றும் 30ம்தேதி என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 183 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 225 சிற்றூராட்சி தலைவர்கள், 2,097 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் என 2,524 பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், 14 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், 14 ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள், 225 சிற்றூராட்சி துணைத் தலைவர்கள் என 255 உறுப்பினர்களுக்கு மறைமுகமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் மாவட்டத்தில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 6 சிற்றூராட்சிகளுக்கும், கோபிச்செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 சிற்றூராட்சிகளுக்கும், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் 10 சிற்றூராட்சிகளுக்கும், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 23 சிற்றூராட்சிகளுக்கும், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 சிற்றூராட்சிகளுக்கும், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் 10 சிற்றூராட்சிகளுக்கும், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 சிற்றூராட்சிகளுக்கும் என 95 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதில், 894 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 95 சிற்றூராட்சி தலைவர் பதவிகளுக்கும், 79 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டுகளுக்கும், 8 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக 30ம் தேதி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 20 சிற்றூராட்சிகளுக்கும், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 14 சிற்றூராட்சிகளுக்கும், பவானி ஊராட்சி ஒன்றியத்தில் 15 சிற்றூராட்சிகளுக்கும், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 சிற்றூராட்சிகளுக்கும், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 22 சிற்றூராட்சிகளுக்கும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 29 சிற்றூராட்சிகளுக்கும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 15 சிற்றூராட்சிகளுக்கும் என 130 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், 1,203 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 130 சிற்றூராட்சி தலைவர் பதவிகளுக்கும், 104 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டுகளுக்கும், 11 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 16ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: