கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அன்னதான கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலை, டிச.10: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று அன்னதான கூடங்களில் திடீர் சோதனை நடத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் திருவண்ணாமலையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் கலைஷ்குமார், சுப்பிரமணி உள்ளிட்ட 21 பேர் கொண்ட குழுவினர் ஒருகுழுவுக்கு 7 பேர் வீதம் தனித்தனியாக திருவண்ணாமலை பஸ் நிலையம், பேகோபுரவீதி, தேரடிவீதி, காந்தி சிலை, காமராஜர் சிலை, திருவூடல் தெரு, கிரிவல பாதை உள்பட நகரின் முக்கிய இடங்களில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது டீக்கடைகளில் கலப்படம் இல்லாத டீத்தூளில் பக்தர்களுக்கு டீ வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது ஒரு டீக்கடையில் கலப்பட டீத்தூள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 2 கிலோ டீத்தூளை கீழே கொட்டி அழித்தனர். இதைத்ெதாடர்ந்து அந்தகடைக்கு உணவு பாதுகாப்பு துறை தர நிர்ணய சட்டத்தின் கீழ் நோட்டீசு வழங்கப்பட்டது.

மேலும், திருவண்ணாமலையில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் ஓட்டல்களில் பக்தர்களுக்கு தரமான குடிநீர் வழங்கப்படுகிறதா? சமையல் செய்யும் இடம் சுத்தமாக உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும், அன்னதானம் வழங்கும் அன்னதான கூடங்கள், சத்திரங்கள் சுத்தமாக உள்ளதா? பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? கிரிவல பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்கள் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு இரவு 10 மணி வரை நீடித்தது. தீபத்திருவிழாவான இன்றும் திருவண்ணாமலை நகரம், கிரிவல பாதையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: