சேர்ந்தமரம்-கடம்பன்குளம் சாலை பராமரிக்க ஒதுக்கிய ரூ.59 லட்சம் எங்கே?

சுரண்டை, டிச.10: சேர்ந்தமரத்திலிருந்து கடம்பன்குளம் செல்லும் சாலையை 5 ஆண்டுகள் பராமரிக்க ரூ.59 லட்சம் நிதி ஒதுக்கியும் பணிகள் ஏதும் துவங்கப்படவில்லை. இதனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்று பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்ப பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். சுரண்டையை அடுத்த சேர்ந்தமரத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கடம்பன்குளம் கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் ஜல்லிகள் பெயர்ந்து ரோடு இருந்ததற்கான அடையாளமே இன்றி காணப்படுகிறது. இதனால் சாலை முழுவதும் உருவாகியுள்ள பெரும் பள்ளங்களில் மழைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் சாலையில் செல்லும் கனரக வாகனங்களால், ஜல்லி கற்கள் சாலையின் ஓரம் செல்லும் பாதசாரிகள் மீது தெறிப்பதால் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியதைடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சாலையை புதிதாக போடாமல் பிரதம மந்திரியின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் பராமரிக்க மட்டும் ரூ.59 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால் அதில் பணிகள் துவங்கும் நாள், முடிவடையும் நாள் குறித்த விபரங்களோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தொடர்பு எண்களோ குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது; சேர்ந்தமரத்தில் இருந்து கடம்பன்குளம் செல்லும் சாலை அமைத்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் தேங்கி நிற்கும் நீரால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவுகிறது. இந்த சாலையை புதிதாக போட வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்ததால் பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் வெறும் 2 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையை 5 ஆண்டுகள் பராமரிப்பதற்கு மட்டும் முன் ரூ.59 லட்சம் நிதி ஒதுக்கியதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அத்துடன் அதிகாரிகள் திருப்தி அடைந்து விட்டனர். இந்த பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் துவங்குமா அல்லது பணிகள் நடந்ததாக கணக்கு காட்டி முடிக்கப்பட்டு விட்டதா என தெரியவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி சாலை சீரமைப்பு பணியை உடனடியாக தொடங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலகத்தில் பெற்று பிரதமர் அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்ப உள்ளோம் என்றனர்.

Related Stories:

>