நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலங்களை பிரித்து வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்

பழநி, டிச. 9: நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலங்களை பிரித்து வழங்க வேண்டுமென பழநி அருகே தும்பலப்பட்டியில் நடந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பழநி அருகே தும்பலப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மாநாடு நடந்தது. ஒன்றிக்குழு செயலாளர் கனகு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சண்முகம், அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்டக்குழு தலைவர் செல்வராஜ், மாவட்டக்குழு செயலாளர் பெருமாள், முன்னாள் செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் பேசினர்.மாநாட்டில் 2016ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு பாக்கிகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2019ம் ஆண்டு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களுக்கும் முழு காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். தும்பலப்பட்டி உபரி நிலத்தை நிலஒப்படை பத்திரம் பெற்றவர்கள், இறந்தவர்களுடைய வாரிசு மற்றும் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளிகளுக்கு நிலத்தை பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்துள்ள அனைவருக்கும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் அருகே பூசாரிபட்டியில் வண்டிப்பாதை புறம்போக்கில் தனியார் கோழிப்பண்ணை செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் ஒன்றியத் தலைவர் சின்னத்துரை, ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் அய்யாச்சாமி, பொன்ராஜ், துணைச் செயலாளர்கள் காளிமுத்து, சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: