பணி நாட்களை குறைக்க திட்டம் ஊர்க்காவல் படையினர் ஊதியம் குறைப்பு

புதுச்சேரி, டிச. 5: புதுச்சேரியில்  ஊர்க்காவல் படையினர் 900க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  போலீசாரோடு இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். போலீசார் செய்யும் அனைத்து பணிகளையும் ஊர்க்காவல் படை வீரர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்களுக்கு மதிப்பூதியமாக ஒரு நாளைக்கு ரூ. 791 வழங்கப்படுகிறது. அதன்படி  சராசரியாக  மாதத்துக்கு 15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக  ரூ.24 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இந்நிலையில்  பட்ஜெட்டில் ஊர்க்காவல் படையினருக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டதாக  தெரிகிறது.

 ஒவ்வொரு மாதமும் போலீசாருக்கு சம்பளம் வழங்கும் அதே நாளில் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் 4ம் தேதியை கடந்தும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து ஊர்க்காவல் படையினர்,  முதல்வரை சந்திக்க,   சட்டசபைக்கு வந்தனர். முதல்வர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.

அவரை சந்திக்க  அவரது வீட்டுக்கு சென்றனர். முதல்வரை சந்தித்து ஊதியத்தை உடனே   வழங்க வேண்டும். பணி நாட்களை குறைக்க கூடாது என வலியுறுத்தினர். இது  தொடர்பாக டிஜிபியிடம் பேசுவதாகவும், சம்பளம் குறைப்பு போன்ற திட்டம் ஏதும் இருப்பதாக  தெரியவில்லை என்றார்.

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது:  ஏற்கனவே ஊர்க்காவல் படையினருக்கு ஊதியம் குறைவாக வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றம் போலீசாருக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டுமென  உத்தரவு போட்டது. போலீசாருக்கான உடல் தகுதி வைத்துதான் எங்களையும் தேர்வு செய்கின்றனர். நிதி பற்றாக்குறையால் ஊர்க்காவல் படையினரின் பணி நாட்களை குறைத்து, சம்பளத்தையும் குறைவாக வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே இதனை தடுக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். முழுமையாக காவல்துறை தலைவரிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Related Stories:

>