₹1 கோடி நிலம் அபகரிப்பு ஆட்சியரிடம் மூதாட்டி புகார்

விழுப்புரம், டிச. 3: விழுப்புரம் ராகவன்பேட்டை பகுதியை சேர்ந்த தாமோதரன் மனைவி சாந்தா (70). இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

 என்னுடைய கணவருக்கு பாகப்பிரிவினை மூலம் கிடைக்கப்பெற்ற நிலமான 77 சென்ட் நிலம் விழுப்புரம் பானாம்பட்டு பாதையில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும். எனது கணவர் மறைவுக்கு பிறகு தற்போது இந்த நிலம் என்னுடைய அனுபவ பாத்தியத்தில் உள்ளது. எனக்கும் என்னுடைய வாரிசுதாரர்களுக்கும் இந்த நிலத்தை பாகம் பிரிவினை செய்து கொடுக்கப்படவில்லை.இந்நிலையில் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த நிலத்தை விற்று மருத்துவ தேவைகளையும், உணவு தேவைகளையும் சரிசெய்ய முயன்றபோது எனது நிலத்தை விழுப்புரம் பானாம்பட்டு பாதையை சேர்ந்த ஒருவர் அபகரிப்பு செய்து அவருடைய பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளார். அவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் எனது நிலத்தை விற்பனை செய்யாதவாறு தடை மனுவும் கொடுத்துள்ளார். அவரிடம் சென்று கேட்டபோது என்னை தகாத வார்த்தையால் திட்டியதோடு வயது முதிர்ந்தவர் என்றுகூட பாராமல் தாக்கினார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து என்னுடைய நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Related Stories: