புதுச்சேரி, டிச. 1: புதுவையில் காவல் நிலையங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பேடி, பீட் ஆபீசர்ஸ் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நெறிமுறைகள் தொடர்பாக 25க்கும் மேற்பட்ட காவலர்களை ராஜ்நிவாஸ் அழைத்துச்சென்று கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு பாடம் எடுத்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை கவர்னர் கிரண்பேடி வாரந்ேதாறும் விடுமுறை நாட்களில் ஆய்வு பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். சில மாதங்களாக அதை தவிர்த்த கவர்னர், நேற்று முன்தினம் இரவு சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் நவ. 30ம்தேதி புதுச்சேரியில் உள்ள காவல் நிலையங்களில் பீட் ஆபீசர்ஸ் குறித்த தகவல்களை அறியும் வகையில் ஆய்வுப்பணி மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு காவல் நிலையம் வந்த அந்தந்த காவல் சரக எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே அறிவித்தபடி ஆய்வு பணிக்காக ராஜ்நிவாஸில் இருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பேடி, வில்லியனூர் காவல் நிலையம் சென்று ஆய்வு பணி மேற்கொண்டார். அங்கிருந்த அதிகாரிகளிடம், தங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து செல்லும் பீட் ஆபீசர்கள் பற்றிய தகவல், அந்தந்த பகுதியின் நிலவரங்கள், பிரச்னைக்குரிய விஷயங்கள், போராட்டங்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எந்தளவு தெரிந்து வைத்துள்ளனர் என்பதை சரமாரி கேள்வி எழுப்பி பரிசோதித்தார்.
மேலும் தேவைப்படும் இடங்களில் பீட் ஆபீசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், ஒவ்வொரு நாளும் அந்தந்த பகுதி நிலவரத்தை சம்பந்தப்பட்ட பீட் ஆபீசர்களிடம் கேட்டு எஸ்ஐ, ஏட்டு முழுமையாக கேட்டு தெரிந்து வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை காவல் அதிகாரிகளிடம் கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தியதாக தெரிகிறது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்ட கவர்னர், கோரிமேடு காவல் நிலையம் வந்து ஆய்வு செய்தார். அங்கிருந்த எஸ்பி சுபம் கோஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், எஸ்ஐ இனியனிடம் ரவுடிகளை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, குற்றங்களை முன்கூட்டியே தடுக்க எடுத்துள்ள பணிகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் சரமாரி கேள்விகளை கேட்டார்.பீட் ஆபீசர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும், அதில் நிலவும் குறைபாடுகளை களைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிய கவர்னர், அவற்றை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கவர்னரின் இணை செயலர் சுந்தரேசன், ஐஜி சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து உருளையன்பேட்டை, பெரியகடை, அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று அங்கிருந்த தலா 10 காவலர்களை அழைத்துக் கொண்டு ராஜ்நிவாஸ் சென்ற கவர்னர், அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு பரீட்சை வைத்தார். அப்போது கிரண்பேடியின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு காவலர்கள் பதிலளிக்க முடியாமல் திணறினர்.இதையடுத்து பீட் ஆபீசர்களின் பணி, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து கவர்னர் பாடம் எடுத்தார். இதற்காக பீட் ஆபீசர்கள் எந்தெந்த அமைப்புகள், நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும், என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது, சரியாக பணிகளை மேற்கொண்டால் எந்தெந்த குற்றங்களை தடுக்க முடியும், ரோந்து செல்லும்போது பீட் ஆபீசர்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பது குறித்து விளக்கினார். காலை 10 மணிக்கு ராஜ்நிவாஸ் அழைத்துச் செல்லப்பட்ட 25க்கும் மேற்பட்ட காவலர்கள் பிற்பகலில் வெளியே வந்தனர். இந்த நிகழ்வின்போது சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், எஸ்பி பாஸ்கரன், கிழக்கு எஸ்பி மாறன் ஆகியோர் உடனிருந்தனர். கவர்னரின் இந்த திடீர் நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.