திருவள்ளூர், காக்களூர், திருமழிசை பகுதிகளில் விதிமீறி இயங்கும் தனியார் தொழிற்சாலை வாகனங்கள்

திருவள்ளூர், நவ. 29: திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமீறி அதிகளவு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் தனியார் வேன் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் எம்ஜிஎம் நகர், காக்களூர் சிட்கோ, திருமழிசை சிட்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை ஷிப்ட் முறையில் பணிக்கு அழைத்து சென்று, மீண்டும் கொண்டு வந்து விட, தொழிற்சாலை நிர்வாகம் தனியார் வேன்களை குத்தகை அடிப்படையில் பெறுகின்றனர். இதில் ஒரு வேனில் அதிகபட்சம் டிரைவர் உட்பட 13 பேர் வரை பயணிக்கலாம். ஆனால் ஒரு வேனில் குறைந்தது 30 பேர் வரை ஏற்றிச்செல்கின்றனர். இதில், பலர் படியில் உட்கார்ந்தபடியும், உள்ளே சிரமத்துடன் நின்றபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

குறிப்பாக பெண் தொழிலாளர்களும் படியில் நின்றபடி உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணிக்கும் அவலம் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் வேன்கள் நிலைதடுமாறி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பல விபத்துகள் நடந்தும், விதியை மீறி அதிகளவு ஆட்களை ஏற்றிச்செல்லும் வேன்கள் மீது போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விபத்துகளை தவிர்த்திடும் வகையில் திருவள்ளூர் வழியாக அதிகளவு ஆட்களை ஏற்றிச் செல்லும் தனியார் வேன்கள் மீது உடனடியாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: