கல்வி நிலையங்கள் அருகே டாஸ்மாக்கடை திறக்கக்கூடாது

இதுகுறித்து நாம்தமிழர் கட்சி குமரி மண்டல வழக்கறிஞரணி இணைச்செயலாளர் ஜாண்சிலின் சேவியர் ராஜ் கூறுகையில், தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 5590, டாஸ்மாக்கடைகளின் எண்ணிக்கை 6823 அந்த அளவிற்கு கல்வி வளர்ச்சியைவிட டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவியாபாரத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு அருகில் டாஸ்மாக்கடைகள் திறக்ககூடாது என்று சட்டம் கூறுகிறது. அதை கண்டுகொள்ளாமல் ஆளும்கட்சியினர் பார் வசதியுடன் வீதிக்கு வீதி கடைகளை திறந்துவிடுகின்றனர். பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் தடியடி, வழக்குபதிவு என போராட்டங்களை நசுக்குகின்றனர். நீதிமன்றம் சென்று முறையிட்டால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கடைதிறக்கமாட்டோம் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்துவிட்டு சில மாதங்களுக்கு பின்னர் அதேபகுதியில் கடைகளை திறந்து நீதிமன்றத்தை கொச்சைபடுத்துகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் ஆற்றூரில் நடைபெற்றது. இதேபோன்று குலசேகரத்தில் மூன்று மருத்துவ கல்லூரிகள், புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் நிரம்பியுள்ள பகுதியில் டாஸ்மாக்கடை திறப்பதற்கு கடுமையான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கல்வி நகரங்களான குலசேகரம், ஆற்றூர், புராதனநகரான திருவட்டார், சுசீந்திரம் போன்ற பகுதிகளில் டாஸ்மாக்கடைகளை அனுமதிக்ககூடாது. மாணவர்கள் வாழ்வில் விளையாடும் வண்ணம் நீதிமன்றத்தை ஏமாற்றி புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்கடைகள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் முறையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: