கொத்தமங்கலம் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் தூய்மை பணிகள்

திருச்செங்கோடு, நவ.28:  கொத்தமங்கலம் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் வழுக்கி விழும் போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று அதிகாரிகள் தரைப்பாலத்தை இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தினர்.  திருச்செங்கோடு  தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், கொத்தமங்கலம் கிராமத்தில்  திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின்  வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் என  நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துசெல்கின்றன. சேலத்தில் பெய்த தொடர் மழையால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி, தண்ணீர் சென்றதால் தண்ணீரில் வந்த கழிவுகள் பாலத்தின் மீது தோங்கியது. தரைப்பாலத்தில் உள்ள குழாயில் விரிசல் ஏற்பட்டு, பாலத்தில் பாசி பிடித்தது. நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.  பாலத்தின் மேற்பகுதியை சுத்தப்படுத்தி, உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் எனவும், ஏற்கனவே அறிவித்தபடி மேம்பாலம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்,  வழுக்கி விழும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து, உடனடி நடவடிக்கை எடுத்த அரசு  அதிகாரிகள், நேற்று காலை ஊழியர்களுடன் வந்து, தரைப்பாலத்தில் உடைந்திருந்த குடிநீர் குழாயை சீரமைத்தனர். மேலும், தரைப்பாலத்தின் மீதிருந்த பாசிகளை இயந்திரம் மூலம் அகற்றி சுத்தப்படுத்தினர். இந்நிலையில், நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை அழைத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தரைப்பாலத்தை சுத்தப்படுத்தி, குழாய் உடைப்பை சீர்செய்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இன்று (28ம்தேதி) நடத்த இருந்த வழுக்கி விழும் போராட்டத்தை கைவிட்டதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

Related Stories: