கருங்கலில் அடகு கடை ஷட்டரை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

கருங்கல், நவ.28: கருங்கலில் அடகு கடையில் மர்ம நபர்கள் புகுந்து 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங் ராஜ் (32). கருங்கல் பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை கடையின் ஷட்டர்  உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் ஜெயசிங்  ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் கடைக்கு விரைந்து  வந்தார். கருங்கல் போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்தனர். கடையின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லாக்கரில்  இருந்த 25 பவுன் நகைகள், ₹10 ஆயிரம் பணம் மர்ம நபர்களால்  கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

 இதையடுத்து மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. அது அடகு கடையில் இருந்து கருமாவிளையில் உள்ள ஒரு  பெட்ரோல் பங்க் சென்றது. பின்னர் அருகில் கட்டிட வேலை நடக்கும் இடத்தில்போய் நின்றது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கைரேகைகளையும் பதிவு செய்தனர். கொள்ளை தொடர்பாக ஜெயசிங் கருங்கல் போலீசில் புகார்  செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.  முதல்கட்டமாக கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதித்தபோது அது  செயல்படவில்ைல. இதையடுத்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை வைத்து  கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என சோதித்து வருகின்றனர்.மேலும் லாக்கரின் சாவியை கடையின் உள்ளே ஒரு அறையில் மறைத்து விட்டு உரிமையாளர் செல்வதும் தெரியவந்தது. எனவே இதுபற்றி விஷயம் தெரிந்த நபர்கள் யாரேனும் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் கொள்ளை  கும்பலா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன் கருங்கல் அருகே குரும்பனையில் பூட்டி கிடந்த வீட்டில் 67 பவுன் நகை கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.

Related Stories: