திருப்பத்தூர், நவ.26: திருப்பத்தூரில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் கந்திலி சுற்றுவட்டாரப் பகுதியில் வழக்கமான கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நரியனேரியில் கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்’ இருப்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: திருப்பத்தூரில் இருந்து 10கி.மீ தொலைவில் நரியனேரி என்னும் சிறிய ஊர் அமைந்துள்ளது. பஸ் நிறுத்தத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும் உட்புறச் சாலையில் அவ்வூரைச் சேர்ந்த மணி என்பவரது விவசாய நிலத்தின் நடுவில் பழமையான ‘நடுகல்’ ஒன்று அமைந்துள்ளதைக் கண்டறிந்தோம். இக்கல்லானது 11 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் நீண்ட கழுமரத்தில் ஆண் ஒருவன் அமர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். அவனது இடது கையினை மார்பிலும் வலது கையினை மேல்நோக்கி உயர்த்தியவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான்.
