விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட பயிற்சி

பாபநாசம், நவ. 22: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை வட்டாரத்தில் 2019-20ம் ஆண்டுக்கான தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இரண்டரை ஏக்கர் சொந்த நிலம் கொண்ட, அரசு பணியில் நெருங்கிய உறவினர் இல்லாத, ஒருங்கிணைந்த பண்ணைய உட்கூறுகள் எவையும் தற்போது கொண்டிருக்காத விவசாயிகள்- பொது இனத்தவர் 80 பேர், பட்டியல் இனத்தவர் 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சாலியமங்கலத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் பேசுகையில், நுண்ணீர் பாசன திட்டம், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம், கூட்டு பண்ணைய திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், விவசாயிகள் கவுரவ நிதியுதவி திட்டம் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்த விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

வேளாண் துணை இயக்குனர் சிங்காரம் பேசும்போது, ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். ஆண்டு முழுவதும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். துணை இயக்குனர் கோமதி பேசுகையில், சென்னை வேளாண் இயக்குனரக அலுவல

ர்கள் அடிக்கடி இத்திட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ள வருவார்கள் என்பதால் களப்பணியாளர்கள் கவனத்துடன் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

பயிர் காப்பீடு உதவி இயக்குனர் சுதா பேசும்போது, அனைத்து விவசாயிகளும் வரும் 30ம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.465 செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்றார். அம்மாப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா பேசும்போது, ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் பதிவு செய்துள்ள பயனாளிகள் நுண்ணீர் பாசன திட்டத்திலும் பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்களுக்கு தெளிப்புநீர் கருவிகள், எச்டிபிஇ பைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். இதைதொடர்ந்து கறவைமாடு பராமரிப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, பரண் மேல் ஆடு வளர்ப்பு குறித்து சாலியமங்கலம் கால்நடை உதவி மருத்துவர் செல்வராஜ் பயிற்சி அளித்தார்.

Related Stories:

>