மும்மூர்த்திநகரில் சாலை மறியல் 57 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர், நவ.22: திருப்பூர் போயம்பாளையம் மெயின் ரோடு மும்மூர்த்தி நகரில் திடீரென  சாலை மறியல் செய்து  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இ.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 57 பேர் மீது அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருப்பூர் போயம்பாளையம் மும்மூர்த்தி நகர் பாறைக்குழியில்  மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சேகரிப்படும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டி வந்தனர். இதனால், இப்பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பல்வேறு தொற்று நோயால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இப்பகுதியில் குப்பை கொட்ட பொத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி கமிஷனரிடம் பலமுறை முறையிட்டனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் இ.கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சசிகுமார், விஜய், ராஜேஷ், மகேஸ்வரன், நடராஜன் மற்றும் 25 பெண்கள் உட்பட 57 பேர் மும்மூர்த்தி நகரில் நேற்று முன்தினம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருப்பூர்-பெருமாநல்லுார் மெயின் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொது அமைத்திக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக 25 பெண்கள் உட்பட 57 பேர் மீது அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: