காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் பால் உற்பத்தி அதிகரிப்பு

காங்கயம், நவ. 20:  காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பரவலாக மழையால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் செழித்து வளர்ந்துள்ளது. இதனால் பால் உற்பத்தி 20 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

 காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளின் கடந்த சில மாதங்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. இதை பயன்படுத்தி விவசாயிகள் மேய்ச்சல் நிலங்களில் நரிப்பயிர், கொள்ளு, சோளம் உள்ளிட்டவற்றை விதைப்பு செய்தனர். தொடர்ந்து பெய்த மழை காரணமாக அவைகள் தற்போது நன்கு வளர்ந்துள்ளது. இதுதவிர கொழுக்கட்டை புற்களும் மேய்ச்சல் நிலங்களில் வளர்ந்து நிற்கின்றது. இதுவரை பச்சை அல்லாத காய வைக்கப்பட்ட வைக்கோல், சோளத்தட்டு உள்ளிட்டவற்றை மாடுகளுக்கு கொடுத்து வந்த விவசாயிகள் தற்போது மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேயவிட்டு வருகின்றனர்.மேலும் பச்சை புற்களை கறவை மாடுகள் உண்பதால் பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இது பற்றி மரவபாளையம் விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், ‘‘சமீப காலங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டதால் விவசாயத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் கறவை மாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். இது லாபகரமான தொழில் இல்லை என்றாலும், ஓரளவு வாழ்க்கையை ஓட்டிக் கொள்ளும் தொழிலாக உள்ளது. உற்பத்தி செய்யும் பாலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கொள்முதல் மையங்களிலும், தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் மையங்களிலும் சப்ளை செய்து வருகிறோம். தற்போது பரவலாக பெய்த மழையால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் செழித்து வளர்ந்துள்ளதால் மாடுகளுக்கு நல்ல மேய்ச்சல் கிடைக்கிறது. இதனால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. வழக்கமாக 1 லிட்டர் பால் கொடுக்கும் மாடு தற்போது 6 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு பால் வரத்தும் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது,’’ என்றார்.

Related Stories: