கடையம் அருகே புதர்மண்டிய அங்கன்வாடி மையம் சீரமைப்பு

கடையம், நவ. 19:   கடையம்  அருகே  புதர்மண்டிய அங்கன்வாடி மையம் தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. கடையம் அடுத்த சேர்வைக்காரன்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்வைக்காரன்பட்டி, மயிலானூர் பகுதியை சேர்ந்த 30 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தின் பின்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டதோடு விஷஜந்துகளின் புகலிடமாக மாறியது. இதனால் ஜன்னல்கள் வழியாகவும் விஷஜந்துகள் உள்ளே புகும் அபாயமும் உருவானது. மேலும் அங்கன்வாடியைச் சுற்றி தேங்கிய மழைநீரில் உருவான கொசுக்களால் நோய் பரப்பும் கேந்திரமும் ஏற்பட்டது. மேலும் இங்குள்ள கழிப்பறை பயன்பாட்டில் இல்லாமல் கிடந்ததால் குழந்தைகள் திறந்துவெளியில் இயற்கை உபாதை கழிக்கும் அவலம் உருவானது. பின்புறம் செப்டிக் டேங்க் குழி பராமரிப்பில்லாமல் மதுபாட்டில்கள் நிறைந்து காணப்பட்டது. இதற்கு மூடி அமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். இதுகுறித்த செய்தி தினகரனில் கடந்த 15ம் தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து ஊராட்சி செயலாளர் கதிரேசன், இதை சீரமைக்கும் படி அங்கன்வாடி பணியாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பணியாளர் அங்கன்வாடி மைய சுவரை சுற்றியுள்ள புதரை தானே சுத்தம்  செய்து சீரமைத்தார். இருப்பினும் திறந்தநிலையில் செப்டிக் டேங்கிற்கு மூடி அமைக்க அரசு முன்வராத பட்சத்தில் தனியார் அமைப்புகள் கைகொடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories:

>