காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் இயற்பியல் துறை

காரைக்கால், நவ. 14: காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தை புதுச்சேரி அரசு தொடங்கியது. இதில் எம்.ஏ.(தமிழ், பொருளாதாரம்), எம்.காம்., பொது நிர்வாகம், சமுதாயப் பணி, கணிதம், வேதியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், இயற்பியல் மற்றும் விலங்கியல் துறை இதுவரை ஏற்படுத்தவில்லை. இதனால் இந்த பிரிவுகளில் சேர்ந்து படிக்க 130 கிலோ மீட்டர் தூரம் கடந்து புதுச்சேரி செல்ல வேண்டியுள்ளது. ஆகையால், பெரும் இன்னல்களை சந்திப்பதால், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் இப்பாடப்பிரிவை விரைவாக கொண்டுவர வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் அமைச்சர் கமலக்கண்ணனிடம் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில், புதுச்சேரியில் இயங்கிவரும் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் கிளையை காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் அமைக்கவும், அதில், இயற்பியல் பிரிவை ஏற்படுத்தி, காரைக்கால் மாணவர்கள் 20 பேர் படிக்கவும் அமைச்சர் கமலக்கண்ணன் ஏற்பாடு செய்தார். இதையடுத்து, அண்ணா அரசு கலை கல்லூரி இயற்பியல் துறை தலைவர் ரங்கையன் தலைமையில் உதவி பேராசிரியர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் அமைச்சர் கமலக்கண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories:

>