பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: கேவிகே ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி, நவ. 13: கேவிகே அதிகாரியிடம் ஊழியர் சம்பள பிரச்னை தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நேற்று ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. புதுச்சேரி குருமாம்பேட் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 60 மாதமாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையில், இதனை வலியுறுத்தி ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதையடுத்து, கடந்த வாரம் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் வேளாண் அறிவியல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் நிறுவனத்தின் பொறுப்பு முதல்வர் நரசிம்மன் மற்றும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 தற்போது அறிவியல் நிலைய முதல்வர் விடுமுறையில் உள்ளதால், 11ம் தேதி அவர் பணிக்கு வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அறிவியல் நிலையம் வந்த முதல்வர் ராமமூர்த்தியை போராட்டக் குழுவினர் சந்தித்து சம்பள பிரச்னை தொடர்பாக முறையிட்டனர். அதற்கு பதிலளித்த அதிகாரி, ஆட்சியாளர்களிடம் முறையிடுமாறு கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று அங்கு உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதற்கு நிர்வாகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வேலை நிறுத்தம் மேற்கொள்பவர்களின் பெயர் விவரத்தை சேகரித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் பரவுவதால் ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தங்களது சம்பள பிரச்னைக்கு தீர்வு காணும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். இதனிடையே அசம்பாவிதங்களை தடுக்க அங்கு 5வது நாளாக மேட்டுப்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேவிகே ஊழியர்கள் இன்று பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: